
தலைநகரில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2027ஆம் ஆண்டில் மேலும் ஆறு இடங்களில் மழைநீர் தற்காலிக சேமிப்பு வசதிகள் (On-Site Detention – OSD) அமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின்கீழ் மஸ்ஜித் உபுடியா, ஜாலான் கியாரா 8, ஜாலான் கியாரா 3, ஜாலான் கிளாப்பா மூடா, ஜாலான் ஜின்ஜாங் உத்தாரா இரண்டாம் கட்டம் மற்றும் பிரிக்ஃபீல்ட்ஸ் கால்பந்து மைதானம் ஆகிய ஆறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கோலாலம்பூர் மாநகர மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மாக் உஜுட் இதனைத் தெரிவித்தார்.
OSD வசதிகள் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரைத் தற்காலிகமாகச் சேமித்து, பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வடிகால் அமைப்புகளுக்குள் வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று அவர் விளக்கினார்.
“இதுவரை பொதுப் பூங்கா மைதானங்கள் உள்ளிட்ட இடங்களில் ஒன்பது OSD வசதிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றின் நிலத்தடி பகுதிகள் நீர் சேமிப்புக் குளங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், மேற்பகுதிகள் தொடர்ந்து பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
மேலும், ஒரு வசதி பதாங் மெர்போக்கில் அமைக்கப்பட்டு வருவது உட்பட மொத்தம் ஆறு OSD திட்டங்கள் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், 2027ஆம் ஆண்டில் மேலும் ஆறு புதிய OSD வசதிகளை அமைப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற கூட்டரசுப் பிரதேச மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


