
வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், குறிப்பாக இணையவழி மோசடிகள் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதில் கூட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு மலேசியா முக்கியத்துவம் அளித்துள்ளது.

27ஆவது ஆசியான் – தென்கொரியா உச்சநிலை மாநாட்டில் (ASEAN-RoK Summit) இந்த விவகாரங்கள் வலியுறுத்தப்பட்டதுடன், ஆசியான் மற்றும் தென்கொரியா இடையிலான பேச்சுவார்த்தை உறவுகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பின் எதிர்காலப் பாதை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதியான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அணுகுமுறைக்கு மலேசியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
பிராந்திய ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச உறவுகளை மேம்படுத்துவதில் மலேசியா கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் இந்த நிலைப்பாடு பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அமைதி ஆகிய துறைகளில் ஆசியான் – தென்கொரியா இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கியத்துவமும் இந்த உச்சநிலை மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


