
இந்திய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக கூலாய் நாடாளுமன்ற அலுவலகம் தொடர்ந்து பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக ஆலயங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும், தொடர்பு துணை அமைச்சருமான Teo Nie Ching தெரிவித்துள்ளார்.

அவரின் தகவலின்படி, 2022 முதல் 2026 ஜூலை மாதம் வரை, கூலாய் தொகுதியில் உள்ள இந்திய ஆலயங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்காக மொத்தம் ரி.ம.343,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 2026ஆம் ஆண்டு மட்டும் இதுவரை ரி.ம.57,000 பல்வேறு சமூக நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“ஒரு ஆலயத்திற்கு உதவுவது என்பது ஒரு சமூகத்தை வலுப்படுத்துவதற்குச் சமம். மலேசியாவின் பன்முக கலாச்சாரமும் சமய ஒற்றுமையும் நமது மிகப்பெரிய பலம். அந்த ஒற்றுமையை அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்,” என்று தியோ நி சிங் வலியுறுத்தினார்.
அண்மையில், பண்டார் புத்ராவில் உள்ள Sri Maha Mariamman Temple, Bandar Putra ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்ட அவர், ஆலய வளர்ச்சிக்கான தனது தொடர்ச்சியான ஆதரவையும் உறுதிப்படுத்தினார்.
2023 முதல் 2025 வரை, ஆலய மேம்பாடு மற்றும் வருடாந்திர விழா ஏற்பாடுகளுக்காக ரி.ம.50,000 வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு மேலும் ரி.ம.10,000 நிதி ஒதுக்கீட்டையும் அவர் அறிவித்தார். மேலும், 2024ஆம் ஆண்டு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் RIBI ஒதுக்கீட்டின் கீழ் ஆலயத்திற்கு ரி.ம.186,500 நிதியும் கிடைத்துள்ளது.
ஆலயங்களுக்கு மட்டுமல்லாமல், கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தியோ நி சிங் தெரிவித்தார். 2022 முதல் 2026 வரை, கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கேலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் செடெனாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய நான்கு தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த ரி.ம.487,687 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திலும் தகுதியும் தேவையும் உள்ள ஆலயங்கள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், உதவி தேவைப்படும் தரப்பினர் தங்களது விண்ணப்பங்களை கூலாய் நாடாளுமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


