
மலாக்கா மாநிலத் தேர்தலில் ரிம் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் பிகேஆர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள எஸ்மா எஸ்ரின் ஹுசேன், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ கைதீரா அபு ஸஹாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

இன்று ஜாசின், லிபாட் காஜாங்கில் அமைந்துள்ள டேவான் எம்பிஜேவில் நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது, தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ எஸ்மா எஸ்ரின் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய யுனேஸ்வரன், மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், ரிம் தொகுதியில் எஸ்மா எஸ்ரினுக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்து அவர் வெற்றி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், சமூகநலப் பணிகள், மகளிர் தலைமைத்துவம் மற்றும் பிகேஆர் கட்சியின் மாநில, தொகுதி அளவிலான அமைப்புகளில் எஸ்மா எஸ்ரின் பெற்றுள்ள அனுபவம், ரிம் தொகுதி மக்களின் நலனுக்காகச் செயல்பட பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா, சையிட் இப்ராஹிம் சையிட் நோ, அக்மால் நாசீர் உள்ளிட்ட ஜோகூர் மற்றும் மலாக்கா மாநில பிகேஆர் தலைவர்களும் கலந்துகொண்டு எஸ்மா எஸ்ரினுக்கு ஆதரவு தெரிவித்தனர்.


